search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புழல் சிறை கைதிகள்"

    தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் கூலியில் 50 சதவீதம் உணவு, உடைகளுக்காக பிடித்தம் செய்யப்படுவதற்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. #section481 #TNprison #TNprisonrulesunconstitutional
    மதுரை:

    தமிழகத்திலுள்ள 9 மத்தியச்சிறைகள் மற்றும் கிளைச்சிறைகளில் சுமார் 5 ஆயிரம் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 

    தொழில் திறனுக்கேற்ப 3 வகையாக கைதிகள் பிரிக்கப்பட்டு சிறையினுள் பல்வேறு விதமான வேலைகள் வழங்கப்படுகிறது. அவர்களின் பணித்திறனுக்கேற்ப 60 ரூபாய், 80 ரூபாய் மற்றும்100 ரூபாய் தினசரி கூலியாக வழங்கப்படுகிறது.

    இந்த கூலி தொகையில் 50 சதவீதம் சிறையில் கைதிகளுக்கான பராமரிப்பிற்காகவும், 20 சதவீதம் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு வழங்கவும் சிறைத்துறை நிவாரண நிதி என்ற பெயரில் பிடித்தம் செய்யப்படுகிறது.

    தண்டனைக்கு பின்னர் விடுதலையாகும் கைதிக்கு அவர் சிறையில் உழைத்து சம்பாதித்த பணத்தில் வெறும் 30 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது.

    இப்படி தமிழ்நாடு அரசின் சிறைத்துறை சட்ட விதி எண்: 481-ல் மாற்றம் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கே.கே.ராஜன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

    இவ்வழக்கு இன்று நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    கைதிகளின் கூலியில் இருந்து மிகப்பெரிய தொகை சிறை நிர்வாகத்தால் பிடித்தம் செய்யப்படுவதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் குறைந்தபட்ச கூலி நிர்ணய சட்டத்துக்கு குறைவான ஊதியம் பெறும் கைதிகளிடம் இருந்து அவர்களின் பராமரிப்புக்காக 50 சதவீதம் தொகையை பிடித்தம் செய்வது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது, முறையற்றதும் கூட என கண்டம் தெரிவித்தனர்.

    இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சிறைகளில் கைதிகளின் உணவு, உடைகள் ஆகியவற்றுக்காக நாளொன்றுக்கு 153 ரூபாய் செலவாகிறது என குறிப்பிட்டார்.

    இருப்பினும் 100, 80 மற்றும் 60 ரூபாய் தினக்கூலி வாங்கும் கைதிகளின் ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் தொகையை பிடித்தம் செய்யும் தமிழ்நாடு அரசின் சிறைத்துறை சட்ட விதி எண்: 481 அரசியலமைப்பு சட்டமீறலாகும். 

    கட்டாய வேலையில் கைதிகளை ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கும் எதிரானதாகும் என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஏற்கத்தகுந்த சில காரணங்களுக்காக அவர்களின் கூலியில் ஒரு சிறிய தொகையை வேண்டுமானால் அரசு பிடித்தம் செய்யலாம் என அறிவுறுத்தினர்.

    அதேவேளையில், குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு வழங்க சிறைத்துறை நிவாரண நிதி என்ற பெயரில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். #section481 #TNprison #TNprisonrulesunconstitutional
    புழல் ஜெயலில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் வழப்பறி வழக்கில் கைதானவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. #PuzhalJail
    மாதவரம்:

    புழல் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயிலில் உள்ள கைதியிடம் மீண்டும் செல்போன் சிக்கி உள்ளது.

    புழல் ஜெயிலில் நேற்று காலை ஜெயிலர் உதய குமார் மற்றும் அதிகாரிகள் கைதிகளின் அறைகளில் சோதனை செய்தனர். அப்போது வழிப்பறி வழக்கில் கைதான நெடுங்குன்றத்தை சேர்ந்த சூர்யாவின் அறையில் செல்போன் இருந்தது.

    அதனை பறிமுதல் செய்தனர். அவருக்கு செல்போன் கிடைத்தது எப்படி? ஜெயில் ஊழியர்கள் உதவினார்களா? யார்-யாருடன் பேசி உள்ளார் என்று விசாரித்து வருகிறார்கள்.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #PuzhalJail
    புழல் சிறையில் கைதிகள் பிரியாணி தயாரிக்கும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதல்ல என்று ஜெயில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். #PuzhalJail
    சென்னை:

    புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக சமீபத்தில் புகைப்படங்கள் வெளியானது.

    இதையடுத்து ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் டி.வி.க்கள், செல்போன், மெத்தைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக 5 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும் தலைமை வார்டன்களும் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் புழல் சிறையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போன்றும், அவற்றை கைதிகள் சாப்பிடுவது  போன்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.


    புழல் ஜெயிலில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய பிறகும் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    கைதிகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்து வசதிகள் செய்து கொடுத்து இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரியாணி மற்றும் சிகரெட் உள்ளிட்டவைக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு தருவதாகவும் தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ குறித்து ஜெயில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கைதிகள் பிரியாணி தயாரிக்கும் வீடியோ சமீபத்தில் எடுக்கப்பட்டதல்ல. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

    சிறைத்துறை நிர்வாகத்தின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. ரம்ஜான் பண்டிகை சமயத்தில் சிறைத்துறை விதியின்படி முஸ்லிம் கைதிகளுக்காக அவர்களது உணவை தயாரிக்க அனுமதிக்கப்பட்டது.

    உணவு பொருட்கள் வெளியில் இருந்து வாங்கி கொடுக்கப்பட்டது. ரம்ஜான் பண்டிகையின்போது கைதிகள் நோன்பு இருக்கவும், சிறைக்குள் பிரியாணியை தயாரித்து கொள்ளவும் இந்த ஆண்டும் அனுமதி அளிக்கப்பட்து என்றனர். #PuzhalJail
    சென்னை புழல் சிறையில் போலீசார் மீண்டும் நடத்திய சோதனையில் பிரியாணி சமைக்கும் அண்டா, ஆஸ்பத்திரியில் பயன்படுத்தும் கட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். #PuzhalJail
    சென்னை:

    புழல் ஜெயிலில் கைதிகள் சிலர் ஆடம்பரமாக இருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியானது.

    இதையடுத்து கடந்த 2 வாரத்துக்கு முன்பு புழல் ஜெயிலில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் நவீன செல்போன்கள், டி.வி.க்கள், ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவுகள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சில அதிகாரிகள் புழல் ஜெயிலில் இருந்து மாற்றப்பட்டனர். இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள ஜெயில்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. புழல் ஜெயிலில் இதுவரை 4 முறை சோதனைகள் நடைபெற்றது.

    இந்த நிலையில் புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனை கைதிகள் சிறையின் புதிய கண்காணிப்பாளராக செந்தில்குமார் பொறுப்பேற்றார்.

    இதையடுத்து சிறைத்துறையின் சென்னை சரக டி.ஐ.ஜி. முருகேசன், கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் புழல் ஜெயிலில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் நேற்று மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கோப்புப்படம்

    நேற்று மாலை 5.45 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9.45 மணி வரை சுமார் 4 மணி நேரம் நீடித்தது.

    இந்த சோதனையின் போது புழல் சிறையில் இருந்து 29 டி.வி.க்கள், 18 கட்டில்கள், 27 எப்.எம். ரேடியோக்கள், 4 குக்கர்கள், பிரியாணி தயாரிக்க பயன்படுத்தப்படும் பெரிய அண்டா, கடப்பாரை கம்பி, 200 கிலோ பாசுமதி அரிசி, 100 கிலோ பொன்னி அரிசி, 80 கிலோ மைதாமாவு, 60 லிட்டர் சமையல் எண்ணை, 50 கிலோ பருப்பு வகைகள், சீரகம், கடுகு, ஜாம்பாட்டில், சோம்பு, நூடுல்ஸ், காய்கறிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதில் பிரியாணி அண்டா சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் சிறை அறையில் பறிமுதல் செய்யப்பட்ட 18 கட்டில்களும் ஜெயிலில் உள்ள மருத்துவமனைக்கு சொந்தமானவை ஆகும்.

    இந்த கட்டில்களை சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு செல்வாக்கு மிக்க கைதிகளுக்கு வழங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 18 கட்டில்களையும் மீண்டும் சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே சிறைத்துறை உயர் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    சிறை வளாகத்தில் கைதிகள் அறையில் இருந்து பொருட்கள் தொடர்ந்து கைப்பற்றப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  #PuzhalJail
    புழல் சிறையில் மீண்டும் நடத்திய சோதனையில் பயங்கரவாதிகள் அறைகளில் இருந்து பிரியாணி அரிசி, டெலிவிஷன் உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். #PuzhalJail #PuzhalPrisoners #TrichyCentralJail
    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைச் சாலைகளில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சிறைத்துறை அதிகாரிகள், கைதிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது அம்பலமாகி உள்ளது. புழல் சிறையில் கைதிகள் தங்களது செல்போனில் எடுத்த புகைப்படங்கள் மூலமாக இது வெட்டவெளிச்சமானது. இது தொடர்பான புகைப்படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சிறையில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளை தாண்டி எப்போதுமே கைதிகள் செல்போனை பயன்படுத்துவது என்பது நீண்ட நாட்களாகவே நடைமுறையில் இருந்து வருகிறது. இது போன்ற சட்ட விரோத செயல்களில் கைதிகள் தாராளமாக ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து புழல் சிறையில் கடந்த 13-ந்தேதி அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சிறை துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா மற்றும் அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக அடுத்த 2 நாட்களும் இந்த சோதனை தொடர்ந்தது. 14 மற்றும் 15-ந்தேதிகளில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் 20 டி.வி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மிக்சி, சமையல் பாத்திரங்கள், பழச்சாறு பிழியும் கருவிகள், சிகரெட், பீடி பண்டல்கள் மற்றும் திரைச்சீலைகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தண்டனை சிறை வளாகத்தில் ஏ பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள 5 கைதிகள் மற்ற சிலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    இந்த நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் அறையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. ஒரே வாரத்தில் 4-வது முறையாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்து இயக்க தலைவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளான பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரது அறைகளில், சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.

    இதற்கு இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அதையெல்லாம் மீறி அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர். இந்த சோதனையிலும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கோப்புப்படம்

    பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரது அறைகளில் இருந்து 2 தொலைக்காட்சிகள், 20 கிலோ பிரியாணி அரிசி, 5 கிலோ பருப்பு, 2 கிலோ காய்கறி, வாசனை திரவியங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இந்த பொருட்கள் அனைத்தும் சிறை வளாகத்தில் பழைய பொருட்கள் போட்டு வைக்கப்பட்டுள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.

    பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் இருவர் மீதும் இந்து முன்னணி மற்றும் பா.ஜனதா பிரமுகர்கள் கொலை வழக்கு உள்ளது. வேலூர் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், டாக்டர் அரவிந்த்ரெட்டி, மதுரை பால்காரர் ஆகியோர் கொலை வழக்கில் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு கைதாகி இருக்கும் கைதிகளும் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு அதிகாரிகள் உறுதுணையாக இருந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புழல் சிறையில் செய்யப்பட்டுள்ள சொகுசு வசதிகள் குறித்து கடந்த வாரம் விளக்கம் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஏ வகுப்பு கைதிகளுக்கு சிறை துறை அனுமதியுடன் சில வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி இருந்தார். இந்த நிலையில் ஏ வகுப்புக்கு தொடர்பு இல்லாத சிறைப் பகுதியில் தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.

    தண்டனை சிறை பகுதிகளில் சோதனை நடத்தியுள்ள அதிகாரிகள், முதல் நிலை பாதுகாப்பு பிரிவு மற்றும் உயர் பாதுகாப்பு பிரிவு பகுதிகளில் இன்னும் சோதனை நடத்தவில்லை. இந்த பிளாக்குகளிலும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

    புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்தது கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை, சேலம், கடலூர் மத்திய சிறைசாலைகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாளையங்கோட்டை சிறையில் நேற்று காலையில் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய 75 பேர் கொண்ட தனிப்படை சோதனை நடத்தியது.

    சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் 2 இரும்பு கம்பிகள் கைப்பற்றப்பட்டன. இதே போல மற்ற சிறைகளிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோதனையும் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று அதிகாலை 6.30 மணிக்கு திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு திருச்சி மாநகர போலீஸ் உதவி கமி‌ஷனர் சிகாமணி, சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு நிகிலா ராஜேந்திரன் தலைமையில் ஆயுதப்படை போலீசார் மற்றும் சிறை வார்டன்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழு அதிரடியாக சோதனை நடத்தினர்.

    ஒவ்வொரு பிளாக்குகளாக சென்று சோதனை நடந்தது. கைதிகள் பயன்படுத்திய கழிவறைகளிலும், மணல் பகுதி, மரங்கள், சமையல் அறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

    அப்போது சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா, பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா என சோதனை நடந்தது. சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

    இதே போன்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள திருச்சி மத்திய பெண்கள் சிறையிலும் இன்று காலை சோதனை நடத்தினர். #PuzhalJail #PuzhalPrisoners #TrichyCentralJail
    அமைச்சருக்கு பணம் கொடுத்துவிட்டு சிறையில் கைதிகள் உல்லாசமாக இருக்க அதிகாரிகள் அனுமதி அளித்திருக்கிறார்கள் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். #CPI #Mutharasan #PuzhalJail
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு பேச்சு மற்றும் கருத்துரிமையை பறித்து வருகிறது. தமிழகத்தில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியை பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் எடுத்து வருகிறது. நேற்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, புதுக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் காவல் துறையையும் நீதிமன்றத்தையும் இழிவாக பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. அவர் மீது உடனடியாக காவல் துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மின்சார தட்டுப்பாடே இல்லை என்று கூறுவது நகைப்புக்கு உரியது. நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகையின் கருத்து என்பது அவர்கள் விடுதலையை காலதாமதப்படுத்தும் முயற்சியாகும்.

    டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் பயிர்கள் கருகி வருகிறது. எனவே டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து போதிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    சிறைத்துறை அதிகாரிகள் அமைச்சருக்கு, நாங்கள் மாதம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். ஆகையால் கைதிகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு உல்லாசமாக இருங்கள் என்று கூறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து துறைகளிலும் இந்த ஆட்சியில் ஊழல் செய்து வருகின்றனர்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு புகார்கள் இருந்தாலும் அவருக்கு கட்சியின் உயர் பதவி அளித்து இருப்பது ஊழல் செய்தால் அவருக்கு பதவி என்ற ரீதியில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அவர் மீது கை வைத்தால் அவர் மற்றவர்கள் தலையில் கை வைத்து விடுவார் என்று தான், அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

    இலங்கையின் இறுதி போரின் போது மத்திய அரசு உள்ளிட்ட பல நாடுகள் எங்களுக்கு உதவி செய்தது என்று ராஜபக்சே கூறியிருப்பது அகம்பாவத்தின் உச்சகட்டம். போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில் பின்பற்றிய டெண்டர் முறை தான் தற்போதும் பின்பற்றபடுகிறது என்றும் மேலும் சிங்கிள் டெண்டர் முறை தி.மு.க. ஆட்சியில் தான் இருந்தது என்றும் அதனால் தி.மு.க. ஆட்சியில் தான் ஊழல் நடந்துள்ளதாக முதல்வர் கூறியிருக்கிறார். அப்படி தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்தது என்றால் ஏன்? இதுநாள் வரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போதைய தமிழக அரசில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்கள் உள்ளதால் அவர்கள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். இனி ஒரு நொடியும் இந்த ஆட்சி தமிழகத்தில் நீடிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #CPI #Mutharasan #PuzhalJail
    முதல்வரும், துணை முதல்வரும் விரைவில் சிறைக்கு செல்ல இருப்பதால் புழல் ஜெயிலில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Congress #Elangovan
    ஈரோடு:

    ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும், பேரணியும் இன்று நடந்தது.

    அதன்படி ஈரோடு காங்கிரஸ் சார்பில் சம்பத் நகர்-நசியனூர் ரோடு பிரிவில் பேரணி தொடங்கி கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. முன்னதாக ஆர்ப்பாட்டம் செய்தனர். பிறகு கலெக்டர் கதிரவனை சந்தித்து மனு கொடுத்தார்.

    இதில் பங்கேற்ற மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ரபேல் போர் விமானம் காங்கிரஸ் ஆட்சியின் போது வெறும் 520 கோடி ரூபாயில் வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த போர் விமானங்களை 1500 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 1100 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. அந்த பணத்தை லஞ்சமாக பெற வாய்ப்புள்ளது.

    இது குறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த போர் விமானங்கள் விலை பற்றி கேட்டால் மழுப்பி வருகிறார். ராணுவம் ரகசியம். இதை வெளியே சொல்ல முடியாது என்கிறார்.

    விலையை கூறுவதில் தவறு ஏதும் இல்லை. என்ன ஆயுதம்? என்ன குண்டு தயாரிக்கிறார்கள்? என்று கேட்டால்தான் ராணுவ ரகசியம்.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை பொறுத்த வரை சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா ஏற்கனவே அவர்களை மன்னித்து விட்டனர். இனிமேல் தமிழக அரசு தான் அதில் முடிவு எடுக்க வேண்டும்.


    புழல் சிறையில் கைதிகளுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுத்தது போல படங்கள் வெளியானது. அது ஏன் என்றால்? மிக விரைவில் முதல்வரும், துணை முதல்வரும் சிறைக்கு செல்ல இருப்பதால் இது போன்ற சலுகை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மின் மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அமைச்சர் தங்கமணி சொல்லி வருகிறார். நேற்று கூட ஈரோட்டில் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கிராமப்புறங்களில் 4 முதல் 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டு வருகிறது.

    இவ்வாறு இளங்கோவன் கூறினார். #Congress #Elangovan #EdappadiPalaniswami #OPanneerSelvam #PuzhalJail
    புழல் சிறையில் கைதிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளின் பின்னணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், உல்லாச விடுதிகளை போன்று கைதிகள் அறை அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. #PuzhalJail #Puzhal
    சென்னை:

    தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம் தாராளமாக இருப்பதாகவும், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    இதுபோன்ற பொருட்களை சட்ட விரோதமாக ஜெயிலுக்குள் அதிகாரிகளே கடத்தி சென்று கொடுப்பதாகவும் புகார் எழுந்தது.

    இதற்காக கைதிகளிடம் சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஜாமீனில் வெளியில் செல்வதற்கு ரூ.25 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டி இருப்பதாக கைதிகளின் உறவினர்கள் புகார் கூறி இருந்தனர்.

    இதேபோல கஞ்சாவை கடத்திச் சென்று கொடுப்பதற்கும், செல்போன்களை கைதிகளிடம் கொண்டு சேர்ப்பதற்கும் தனித்தனியாக பணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

    இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்கள் வெளியானது. அதில் ஒவ்வொரு சட்ட விரோத செயல்களுக்கும் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்கிற பட்டியலும் வெளியாகி இருந்தது.

    இதைத் தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. அதில், “சிறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    புழல் ஜெயிலிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுபோன்று கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்மூலம் கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் அம்பலமாகி இருக்கிறது.

    சிறையில் கைதிகள் தாங்கள் தங்கியிருந்த அறைகளின் பின்னணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், “உல்லாச விடுதிகளை போன்று கைதிகள் அறை அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. வண்ணமயமான திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டு உள்ளன.

    அறைக்குள் கட்டில் போடப்பட்டு அதில் சொகுசு மெத்தையும் போடப்பட்டு இருக்கிறது. விலை உயர்ந்த தலையணைகளும் காணப்படுகின்றன.

    இதையெல்லாம் பார்க்கும்போது சிறையில் அதிகாரிகளின் துணையுடன் கைதிகள் கேட்டதெல்லாம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

    புழல் சிறையில் கைதிகள் உற்சாகமாக இருக்கும் காட்சிகள்.

    உல்லாசமாக சுற்றுலா பயணம் மேற்கொள்வது போல டிப்-டாப்பாக உடைகளை அணிந்து கைதிகள் காணப்படுகிறார்கள். விலை உயர்ந்த ஷூக்களையும் கைதிகள் அணிந்துள்ளனர். டி-சர்ட், அரைக்கால் சட்டை ஆகியவற்றுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடியும் கைதிகள் சிறைக்குள் போஸ் கொடுத்துள்ளனர்.

    செல்போன் மூலம் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.

    சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதி ஒருவர் உற்சாகமாக அமர்ந்து போஸ் கொடுக்கிறார். இன்னொருவர் சிறை வளாகத்தில் “ஹாயாக” நடந்து செல்கிறார். ஒரு கைதி ஜிப்பா உடை அணிந்தபடி இரண்டு கைகளையும் நீட்டி போஸ் கொடுக்கிறார். அந்த படமும் வெளியாகி இருக்கிறது.

    இதேபோல அலுவலகங்களுக்கு மதிய உணவு எடுத்து செல்பவர்கள் பயன்படுத்தும் டிபன்பாக்ஸ்களும் சிறைச் சாலைகளுக்குள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    அதில் விதவிதமான உணவு வகைகளும் உள்ளன. ஜெயிலுக்குள்ளேயே இந்த உணவு வகைகள் சமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எலக்ட்ரிக் குக்கர்களும் படத்தில் உள்ளன.

    இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சிறையில் உள்ள கைதிகள் சிலர் தங்களது செல்போன்களை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள கடத்தல் கும்பலுடன் பேசியுள்ளனர். இதன் பின்னணி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சிறையில் இருக்கும் ரவுடிகள் அங்கிருந்தபடியே கொலைக்கு சதி திட்டம் தீட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

    இந்த நிலையில் புழல் சிறையில் இருந்து வெளிநாடுகளுக்கும் கைதிகள் போன் செய்து பேசி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புழல் சிறையில் இவ்வளவு வசதிகளையும் செய்து கொடுத்தது யார்? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

    இதன் முடிவில் சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.  #PuzhalJail #Puzhal
    ×